மாவட்ட செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் - தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

சிதம்பரம்,

சிதம்பரம் நகரில் உள்ள தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளம், நாகேசரிக்குளம், ஓமக்குளம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வீடுகளை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எனக்கூறி நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டது. இதில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி கண்டன கோஷம் எழுப்பினார். அப்போது அவர், வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண நடந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கண்டன உரையாற்றினார்.

முன்னதாக திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணியாற்றும். தற்போது நடைபெறும் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வருகிற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே கருதப்படும்.

ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர். அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு இந்த செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறது. ஆனாலும் அதையும் மீறி தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெறும்.

சிதம்பரம் நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களை நீதிமன்ற உத்தரவை காட்டி, வீடுகளை இடித்துள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் தராதது அதிர்ச்சியளிக்கிறது. கொத்தட்டை கிராமத்தில் தலித் மக்களுக்கான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை அரசு அதிகாரிகள் மீட்க வேண்டும்.

சிதம்பரம் பகுதியில் உள்ள பாசன, கிளை வாய்க்கால்களை தூர்வாராததால் ஆற்றில் வரும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி- நாகை 4 வழிச்சாலை பணிகள், பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலை பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். கீழடியில் நடந்த அகழாய்வு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் தமிழின் பெருமை உலகம் முழுவதும் பரவியுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருட்களை தமிழ்நாட்டிலேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஆகம விதியை மீறி திருமணம் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்த திருமணம் நடந்ததற்கு பின்னணி என்ன? அதற்கு பின்னால் யார், யார்? இருக்கிறார்கள் என்பதை எல்லாம் முழுமையாக கண்டறிய வேண்டும். இது குறித்து தமிழக அரசு ஒரு உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்