ஆவூர்,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, விஜயபாஸ்கருக்கு பெண்கள் கும்மி அடித்தும், கோலாட்டம் அடித்தும், குலவையிட்டும், கோலம் வரைந்தும் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
நான் உங்கள் வீட்டுப்பிள்ளை. உங்களிடம் நான் வேட்பாளராக வரவில்லை. உங்கள் வீட்டில் ஒருவனாக நான் வந்துள்ளேன். நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே என் மரணத்திற்கு பின்பு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளேன். இதனால் எனது மரணத்திற்கு பிறகு 11 உயிர்கள் காப்பாற்றப்படும்.
அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே என் ரத்தத்தில் ஊறிய ஒன்று. என் உடலில் உள்ள ரத்த அணுக்களில் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் எல்லாமே அடுத்தவர்களுக்கு உதவி செய்வதுதான். போகிற வழியில் ஒரு விபத்து என்றாலும் துடிதுடித்துப் போய் அந்த உயிர்களை காப்பாற்றி உள்ளேன். ஏன், சினையாக இருந்த பசுமாடு அடிபட்டு கிடந்த போதும் கூட காப்பாற்றி உள்ளேன்.
நான் என்னையே விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு கொடுத்துள்ளேன். மக்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை, என் உயிர் இருக்கும் வரை உங்களுக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன். விராலிமலை தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து தொகுதியை இன்னும் உச்சத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் எல்லாம் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். (அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் நாங்களெல்லாம் உங்களுக்குத்தான் வாக்களிப்போம், நீங்கள் விராலிமலை தொகுதியை மாற்றிக் காட்டி உள்ளீர்கள் கஷ்ட காலங்களில் எங்களோடு இருந்து உதவி இருக்கிறீர்கள் என்று கூறினர்.)
அப்போது அமைச்சர் நீங்கள் கூறும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இன்னும் உங்களுக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன். நீங்கள் எல்லாம் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்து அ.தி.மு.க. அரசின் நல்லாட்சி தொடர ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.