திரு.வி.க.நகர்,
சென்னை செங்குன்றம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 20). இவருடைய தாய் அம்சவேணி புற்றுநோயால் இறந்துவிட்டார். தந்தை சந்தோஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய்-தந்தையை இழந்த சுகன்யா மற்றும் அவருடைய 17 வயது தங்கை பிரீத்தி இருவரும் உறவினரான சுரேகா என்பவர் வீட்டில் வசித்து வருகின்றனர். சுகன்யாவுக்கு கண்பார்வை குறைபாடு உள்ளது.
இந்தநிலையில் சுகன்யாவுக்கு, கோவை வடமதுரையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்ற வாலிபருடன் வருகிற 4-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடும் பொருளாதார சிக்கலில் இருந்த சுகன்யா, தனது திருமணத்துக்கு உதவி செய்யுமாறு சென்னை தலைமைச்செயலக காலனி பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தன்னுடன் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் சிறு தொகையை நிதியாக பெற்று சுகன்யாவின் திருமணத்துக்கு தேவையான நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்க முடிவு செய்தார்.
இதையடுத்து சுகன்யாவை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து அவருக்கு திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பட்டுச்சேலை அணிந்து வந்த சுகன்யாவுக்கு மாலை அணிவித்து மணப்பெண்போல அலங்கரித்தனர்.
பின்னர் அவரது திருமணத்துக்கு தேவையான அரை பவுன் தங்க கம்மல், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, ரூ.5 ஆயிரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களான பீரோ, கட்டில், மெத்தை, உணவு பாத்திரங்கள், மிக்சி, புடவைகள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழங்கினார். இதனால் நெகிழ்ச்சி அடைந்த சுகன்யா, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.