ஆவூர்,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் நேற்று அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் பேரூராட்சி மற்றும் விராலிமலை கிழக்கு ஒன்றிய பகுதியை சேர்ந்த வில்லாரோடை, சூரியூர், எழுவம்பட்டி, ஆலங்குளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் நான் கடந்த 2 முறை வெற்றிவாய்ப்பை இழந்துள்ளேன். எனவே தற்போது எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். எனவே நீங்கள் அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு திட்டம் என்பதை மாயனூரில் தொடங்கி வெட்டி கொண்டுவரவேண்டும். ஆனால் குன்னத்தூரில் தொடங்கி ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் விஜயபாஸ்கர் உங்களுக்கெல்லாம் பொங்கல் சீர் என்று ஒன்றை கொடுத்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கொடுக்காமல் இப்போது கொடுத்தது அது பொங்கல் சீர் அல்ல. தேர்தல் சீர் ஆகும்.
தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி எண்ணற்ற பல நல்ல திட்டங்களை பொதுமக்களுக்கு செயல்படுத்த உள்ளது. எனவே நீங்கள் அனைவரும் வருகிற 6-ந் தேதி மனசாட்சியோடு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து ஒரு நல்ல தீர்ப்பை வழங்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.