மாவட்ட செய்திகள்

நீர்வரத்து 10,535 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,535 கனஅடியாக அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த வாரம் முதல் வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இந்த நீர்வரத்தானது அவ்வப்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக அதிகரித்தும், மழை இல்லாத காலங்களில் குறைந்தும் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. ஒகேனக்கல் வழியாக இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 535 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 7 ஆயிரத்து 769 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று 10 ஆயிரத்து 535 கனஅடியாக அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 44 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 46 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நீர்வரத்து தொடர்ந்து மேலும் அதிகரித்து வந்தால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதற்கிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. வினாடிக்கு 15 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பரிசல்கள் இயக்க நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. மேலும், ஆற்றின் கரையோர பகுதிகளில் குளிப்பதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் அருவிகள் அமைந்துள்ள இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்