கோவை,
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட்டம் குளு, குளு சீதோஷ்ண நிலையை கொண்டது. ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடை காலமாகும்.
ஜில்லென்ற இதமான காலநிலை நிலவிய கோவையில் தற்போது முன்கூட்டியே அதாவது பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்ட தொடங்கியது. தற்போது வெப்பநிலை மேலும் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் அவதி
இதனால் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரி மற்றும் குளிர்பான கடைகளை பொதுமக்கள் நாடி செல்கிறார்கள். அத்துடன் குளிர்சாதனம் மற்றும் மின்விசிறிகளை 24 மணிநேரமும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும் வெயில் அதிகரித்து வருவதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். கோவையில் முன்கூட்டியே வெயில் வாட்டி வதைப்பது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சுப ராமநாதன் கூறியதாவது:-
வெப்பநிலை உயரும்
கோவையில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை நீடித்தது. இதன் காரணமாக பனியின் தாக்கம் குறைந்ததால் காற்றில் ஈரப்பதம் போதுமானதாக இல்லை.
எனவே பிப்ரவரி மாதத்தில் முன்கூட்டியே வெயில் அடித்தது. தற்போதைய வெயிலுக்கு ஜனவரி மாதம் பெய்த மழையும் ஒரு காரணம் ஆகும்.
தற்போது சராசரியாக பகலில் 35.5 டிகிரி செல்சியசும், இரவில் 23.5 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இதனால் உஷ்ணம் அதிகரித்து உள்ளது. இந்த மாதம் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோவையில் வெயிலின் அளவு 34 டிகிரி செல்சியசாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்போதே வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயிலின் பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கும். பழங்கள் சாப்பிடுவது, தண்ணீர், இளநீர் குடிப்பது, கார வகை உணவு பொருட்களை தவிர்ப்பது ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.