திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் பிரதீப் (வயது 19). ஐ.டி.ஐ. மாணவர். நேற்று முன்தினம் பிரதீப் தனது நண்பர்களான வள்ளுர்புரம் பகுதியை சேர்ந்த சரவணன், கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேசன், ஈக்காடு பகுதியை சேர்ந்த அசோக்கிருஷ்ணா ஆகியோருடன் பூண்டி நீர்தேக்கத்துக்கு சென்றார்.
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாய் அருகே நயப்பாக்கம் பகுதியில் நண்பர்களுடன் செல்பி எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக பிரதீப் கால் தவறி கால்வாயில் விழுந்தார். இது குறித்து அவரது நண்பர்கள், திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மாணவன் பிரதீப்பை தேடினர்.
பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிகக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.