மாவட்ட செய்திகள்

‘உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது?’ 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீசு

உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நேற்று நோட்டீசு அனுப்பினார். அதில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதில் ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுவிட்டார். மற்ற 15 எம்.எல்.ஏ.க்களும் எக்காரணம் கொண்டு ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

இதனால் முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 18-ந் தேதி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்ட சபையில் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 19-ந் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய்வாலா உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை குமாரசாமி புறக்கணித்தார்.

இதற்கிடையே சனிக் கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறைக்கு பிறகு நேற்று காலை சட்டசபை கூடியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் ரமேஷ்குமார் பேசினார். அப்போது அவர், சுப்ரீம் கோர்ட்டு கொறடா உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கவில்லை. சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் கொறடா உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கூறினார்.

அதைதொடர்ந்து பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜெகதீஷ்ஷெட்டர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக தேதியை சபாநாயகர் முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர், நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் முடிந்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறினார்.

இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேசியதாவது:-

15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உட்கார்ந்துள்ளனர். இதற்கு காரணம் யார், என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் கேட்கவில்லை. இதற்கும், தங்கள் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள். குதிரைபேரம் நடந்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இது ஆபரேஷன் தாமரை இல்லையா? நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று பா.ஜனதாவினர் கேட்கிறார்கள். இது தான் உங்களின் தார்மீக அரசியலா?

தமிழகத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள், கவர்னரை சந்தித்து அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி, மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறினர். இதை காரணமாக வைத்து தமிழக சட்டசபை சபாநாயகர், அவர்களை தகுதி நீக்கம் செய்தார். தகுதி நீக்கத்திற்கு ஆளான எம்.எல்.ஏ.க்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மனுவை நிராகரித்த கோர்ட்டு, சபாநாயகர் நடவடிக்கை சரியே என்று தீர்ப்பு வழங்கியது. அதே போன்ற விஷயம் தான் தற்போது கர்நாடகத்தில் நடக்கிறது. அதனால் ராஜினாமா செய்துள்ள 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

அந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது முடிவு எடுக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது அர்த்தமற்றது. தற்போது திரிசங்கு நிலை உள்ளது. அதனால் ராஜினாமாவை ஏற்பது அல்லது நிராகரிப்பது அல்லது தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் முதலில் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேசினார்.

இதற்கிடையே நேற்று இரவு 11 மணிக்கு மேலும் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.

இதற்கிடையே ராஜினாமா செய்துள்ள 15 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் மனு வழங்கியுள்ளது. கொறடா உத்தரவு பிறப்பித்தும் அந்த 15 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, பிரதாப்கவுடா பட்டீல், பி.சி.பட்டீல், சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, சுதாகர், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு சபாநாயகர் நேற்று நோட்டீசு அனுப்பி இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி சபாநாயகர் கேட்டுள்ளார்.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சங்கர், எச்.நாகேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், நேற்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமிக்கு உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டு இருந்தனர்.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு, சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இன்று விசாரணை நடத்த வாய்ப்பே இல்லை. இவ்வாறு நாங்கள் முன்பு விசாரணை நடத்தியதே இல்லை. நாளை(இன்று) இதை பார்க்கிறோம் என்றார். சுயேச்சை எம்.எல்.ஏ.க் களின் மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு