உலக அழிவானது, ஒன்று புவி வெப்பமாதல் காரணமாக ஏற்படக்கூடிய சுனாமி, துருவப் பனிமலை உருகிய வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங் களால் நிகழலாம்.
அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டு வரும் தானாக சிந்தித்து செயல்படும் ரோபாட்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் மூலமாக நிகழலாம் என்று பல விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.
ஆனால், மூன்றாவதாக, வேற்றுகிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்கள் பூமியைக் கைப்பற்றி மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட பல உயிரினங்களை அழித்துவிடலாம் என்று யூகித்திருக்கிறார் மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.
இவற்றில், இயற்கை சீற்றங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு கருவிகள் மனிதகுல அழிவை ஏற்படுத்தலாம் என்பது நம்பும்படியாக இருக்கிறது. ஆனால், ஏலியன்கள் மனிதகுல அழிவை ஏற்படுத்தலாம் என்பது நம்பும்படியாக இல்லை.
ஏனெனில், ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முக்கியமாக, ஏலியன்கள் எப்படி இருப்பார்கள் என்பதும், எங்கு இருக்கிறார்கள் என்பதற்குமான எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை என்பது குறிப் பிடத்தக்கது. இருந்தபோதும், ஆய்வுகள் தொடர்கின்றன.
உண்மை இப்படியிருக்க, ஏலியன்களால் உலக அழிவு ஏற்படலாம் என்பதை ஏற்பது கடினம்தான். அது சரி, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விண்வெளி ஆய்வுக் கருவிகளும், ஆய்வு நிதிகளும் இருந்தும் இதுவரை உலகில் யாராலும் ஏலியன்களை கண்டறிய முடியாமைக்கு என்ன காரணம்?
இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு விடை சொல்ல முயன்றிருக்கிறார் ஜெர்மனி நாட்டிலுள்ள சோன்னிபெர்க் அப்செர்வேட்டரி எனும் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே.
அதாவது, பூமி தவிர்த்த பிரபஞ்சத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வாழக்கூடிய மற்றும் விண்வெளிக்கு பயணிக்க முயலும் எந்தவொரு ஏலியன் நாகரிகத்துக்கும், அவர்களின் கோளில் இருக்கும் ஈர்ப்பு விசையைத் தாண்டி பயணிப்பது என்பது முக்கியமான சவால் என்கிறார் விஞ்ஞானி ஹிப்கே.