பூந்தமல்லி,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, பூந்தமல்லி பொது வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக பூந்தமல்லியில் 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா 3-வது அலையில் மீண்டும் ஊரடங்கு வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடைகளில் கூட்டம் சேர்க்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஓட்டலில் அமர்ந்து சாப்பிட வாய்ப்பளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி. அதேநேரம் ஓட்டல்களை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பெண்கள் தலையில் வைக்கும் பூக்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.