செங்குன்றம்,
செங்குன்றம் அடுத்த சாமியார்மடம் பனையாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 34). லாரி டிரைவர். இவருடைய மனைவி சரஸ்வதி (30). இவர்களுக்கு வெற்றிமாறன் (8) என்ற மகனும், பிரவீனா (5) என்ற மகளும் உள்ளனர்.
இவர்களில் வெற்றிமாறன், புழல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பும், பிரவீனா 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மதன், தனது மகன், மகள் இருவரையும் தினமும் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச்சென்று விடுவதும், மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம்.
கதவு பூட்டி கிடந்தது
ஆனால் நேற்று மாலை பள்ளி முடிந்து வெற்றிமாறன், பிரவீனா இருவரையும் அழைத்துச்செல்ல மதன் வரவில்லை. இருவரும் அக்கம் பக்கம் உள்ள சக மாணவர்களுடன் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து நீண்டநேரம் தட்டிப்பார்த்தும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
உடனடியாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு கணவன்-மனைவி இருவரும் மின்விசிறியில் ஒரே புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அனாதையான குழந்தைகள்
இதையடுத்து போலீசார், தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதன்-சரஸ்வதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் தங்கள் தாய்-தந்தையை இழந்து அவர்களின் 2 குழந்தைகளும் அனாதையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.