சமயபுரம்,
திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ளது அழகியமணவாளத்தில் இருக்கும் சுந்தரராஜ பெருமாள் கோவில். இக்கோவிலில் இருந்த சுமார் 3 அடி உயரம் உள்ள அழகிய மணவாளன் பெருமாள், பிள்ளையாளம்மன் மற்றும் சுமார் 2 அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய நான்கு உற்சவர் சிலைகளையும் கடந்த ஆண்டு பாதுகாப்பு கருதி கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் உதவியுடன் கோவில் நிர்வாகம் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கிராம மக்கள் ஆடி மாதத்தில் சாமி சிலைகளுக்கு பூஜை செய்ய வேண்டும் என்றும், அதனால் நான்கு சிலைகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்து வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து திருப்பைஞ்சீலி கோவிலில் இருந்த அழகியமணவாளம் சுந்தரராஜ பெருமாள் கோவில் சிலைகளான அழகியமணவாளன்பெருமாள், பிள்ளையாளம்மன், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 4 சிலைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் கோவில் நிர்வாகத்தினர் அழகிய மணவாளம் கிராம பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பிள்ளையாளம்மனுக்கும், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வணங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் விழா முடிந்ததும் அங்கிருந்த 4 சிலைகளையும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வந்து பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதை பெற்றுக் கொண்ட இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி உதவி ஆணையர் ராணி, மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் ஹேமலதா மற்றும் கோவில் பணியாளர்கள், சிலைகளை கோவிலின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தனர்.