உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பூதிப்புரம். இந்த ஊரில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் காலனிக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாலத்தின் வழியாக காலனி மக்கள் உசிலம்பட்டி பகுதிக்கு சென்று வந்தனர். மேலும் சுடுகாட்டிற்கு செல்லவும் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் இந்தப் பாலம் கடந்த பல மாதங்களுக்கு முன்பு முற்றிலும் உடைந்து விட்டது.
இதானல் பூதிப்புரம் காலனியில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். முக்கியமாக இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வழியில்லாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த மக்கள் கூறினர்.
இந்தநிலையில் நேற்று பூதிப்புரம்-காலனியை சோந்த ஒருவர் இறந்து விட்டார். இவரின் உடலை கொண்டு செல்ல வழியில்லாததால் கிராம மக்கள் பாலம் அமைத்துக் கொடுக்கும் வரை, இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல மாட்டோம் எனக்கூறி திடீர் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், சிவாஜி, முத்துராமன் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் முத்துராமன், கிராம நிர்வாக அலுவலர் பத்மநாதன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் தற்காலிகமாக உடைந்த பாலத்தின் அருகே மாற்றுப்பாதை அமைத்துக்கொடுப்பது என்றும் விரைவில் உடைந்த பாலத்தை முழுமையாக கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து உடனடியாக ஜே.சி.பி.எந்திரம் வரவழைக்கப்பட்டு மாற்றுப்பாதை அமைக்க அதகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தற்காலிக பாதை அமைக்கப்பட்ட பின்பு அதன்வழியாக இறந்தவரின் உடலை கிராம மக்கள் அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.