மாவட்ட செய்திகள்

தணிந்ததா கொரோனா அச்சம்? முககவசம் அணியாமல் பொதுமக்கள் அலட்சியம் மீண்டும் அபராத நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோரிக்கை

சென்னையில் மக்களிடையே கொரோனா அச்சம் தணிந்தது போன்று பலர் முககவசம் அணிவதில் அலட்சியம் காட்ட தொடங்கி உள்ளனர். மீண்டும் அபராத நடவடிக்கைகளை போலீசார் துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை,

சென்னையில் கொரோனா பரவல் அதிகம் இருந்த நேரத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் காணப்பட்டது. எனவே பெரும்பாலானோர் முககவசத்தை முறையாக அணிந்து வெளியே சென்று வந்தனர். சமூக இடைவெளியையும் தவறாமல் கடைபிடித்தனர். கைகளையும் அவ்வப்போது சோப்பு அல்லது கிருமி நாசினி மூலம் கழுவி வந்தனர்.

எனினும் ஒரு சிலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டியதால், தமிழகத்தில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதனை மீறுவோர்கள் மீது போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. எனவே போலீசார், மாநகராட்சி அதிகாரிகளின் அபராத நடவடிக்கைக்கு அஞ்சி அனைவரும் முககவசம் அணிய தொடங்கினர்.

தமிழக அரசு கடுமையான ஊரடங்கு நடைமுறைகளை அமல்படுத்தியதால் கொரோனா தொற்று பரவல் தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு படிபடியாக தளர்த்தி வருகிறது.

ஆனால் மக்களிடையே கொரோனா அச்சம் தணிந்ததுபோல் தற்போது முககவசம் அணியாமல் சாலைகளில் செல்வோர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பலர் முககவசத்தை வாய், மூக்கை மறைத்து அணியாமல் செயின் போன்று கழுத்தில் அணிந்து அலட்சியமாக செல்கின்றனர். பஸ்-ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், டாஸ்மாக் கடைகள் போன்ற இடங்களிலும் சமூக இடைவெளி உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது அதிரடி அபராத வசூல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் தற்போது அப்பணியில் தீவிரம் காட்டுவது இல்லை என்றும், இதுவே மக்களிடையே அலட்சிய போக்கு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தற்போது டெல்டா பிளஸ் கொரோனா வகை தமிழ்நாட்டில் கால் பதித்துள்ளது. எனவே மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கொரோனா 3-வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே தான், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும் ஒவ்வொரு முறையும், தமிழக மக்கள் தவறாமல் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை தொடர்ந்து சொல்லி வருகிறார்.

தமிழ்நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என்ற சூழல் வரும் வரையில் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது மீண்டும் அபராத நடவடிக்கைகளை போலீசார் துரிதப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்