திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள சிற்றம்பாக்கம் தோப்பு காலனியை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 35). இவர் மீன் மற்றும் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் எட்டியப்பன் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பள்ள மொளச்சூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சோனியா (30) என்ற பெண்ணை கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சோனியா தன் வீட்டில் உள்ள அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், சோனியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிற்றம்பாக்கம் கிராமத்திற்கு விரைந்து வந்து இறந்த சோனியாவின் உடலை கண்டு கதறி அழுதனர்.
இச்சம்பவம் குறித்து சோனியாவின் தந்தையான கிருஷ்ணன் (60) என்பவர் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் சாவுக்கு காரணமான மருமகன் எட்டியப்பன், அவரது தந்தை கங்கன் மற்றும் ரவி ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.
ஆனால் போலீசார் இது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிற்றம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சோனியாவின் சாவிற்கு காரணமான கணவர் எட்டியப்பன், தந்தை கங்கன் மற்றும் ரவி 3 பேரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.