மாவட்ட செய்திகள்

தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க கோரி குமரியில் சி.ஐ.டி.யு. போராட்டம் ஊரடங்கை மீறியதால் போலீசார் நடவடிக்கை

குமரியில் தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்கக்கோரி சி.ஐ.டி.யு.வினர் போராட்டம் நடத்தினர். ஊரடங்கை மீறியதால் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

நாகர்கோவில்,

குமரியில் தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்கக்கோரி சி.ஐ.டி.யு.வினர் போராட்டம் நடத்தினர். ஊரடங்கை மீறியதால் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

10 நிமிட போராட்டம்

ஊரடங்கை மீறி குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரவர் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மீனவர்களுக்கு வாரியம் மூலம் ரூ.1,000-ம், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகிய பொருட்களும் வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனைகளை புரிந்து கொண்டு கூடுதல் நிவாரணம் வழங்கி தங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும், கொரோனா நோய் சிகிச்சைகளை வழங்கி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.7500 மற்றும் 3 மாதத்துக்கான உணவு பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அதாவது, காலை 10.30 மணி முதல் 10.40 மணி வரை 10 நிமிட போராட்டம் நடந்தது.

சமூக இடைவெளியுடன்...

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பரதர் தெருவில் சி.ஐ.டி.யு.வினர் அவரவர் வீடுகள் முன்பு நேற்று காலை கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜேசுராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. குமரி மாவட்ட துணை தலைவர் அந்தோணி, நிர்வாகிகள் மீனா, ராஜேஸ்வரி, மீனாட்சி சுந்தரம், அஸிஸ், மோனிசா, திரேசம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி பிடித்தபடி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அவரவர் வீடுகள் முன்பு சமூக இடைவெளியை கடைபிடித்து நின்றனர்.

குடும்பமாக பங்கேற்பு

மேலும் நாகர்கோவில் நகரின் பல்வேறு இடங்களிலும், சின்னமுட்டம், கோவளம், மணக்குடி, ராஜாக்கமங்கலம்துறை, சின்னத்துறை, மார்த்தாண்டன்துறை, கருங்கல், மார்த்தாண்டம், நித்திரவிளை, அருமனை, குலசேகரம், தக்கலை, திங்கள்சந்தை, திட்டுவிளை, வேர்க்கிளம்பி, குளச்சல், பரசேரி, ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் உள்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த 10 நிமிட போராட்டம் நடந்தது.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்ட தலைவர் சிங்காரம், நிர்வாகிகள் சரத்போஸ், ஐடாஹெலன், சந்திரகலா, சுகுமாரன், பொன்.சோபனராஜ் மற்றும் நிர்வாகிகள் அவரவர் வீடுகளின் முன்பு குடும்பமாக கலந்து கொண்டனர். மேலும் ஊரடங்கை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது