சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் நகரிலும் விடிய, விடிய கன மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இதே போல ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. பலத்த மழை பெய்ததால் சாலையில் ஆங்காங்கே லேசான மண்சரிவு ஏற்பட்டது. மலைப்பாதையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது.
இந்த நிலையில் ஏற்காடு- சேலம் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில் ராட்சத பாறைகள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காலை 6 மணிக்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் கொண்டு பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பாறைகள் அகற்றப்பட்டன. இதன் பின்னர் வாகனங்கள் சென்றன. பாறைகள் விழுந்ததால் ஏற்காடு-சேலம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் வருமாறு:-
காடையாம்பட்டி-32.2 மி.மீ., ஏற்காடு- 26.6 மி.மீ., சேலம் 24.5 மி.மீ., சங்ககிரி-4.1 மி.மீ., ஓமலூர்-4 மி.மீ., ஆத்தூர்-3.4 மி.மீ., மேட்டூர் 2.8 மி.மீ.