வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே சேணன்கோட்டையில் உள்ள 51 அடி உயர பக்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காலை விஸ்வரூப தரிசனம், ஆஞ்சநேயருக்கு பால், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சீதா-கல்யாணராமன் மற்றும் உற்சவர் ஆஞ்சநேயர் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சீதா-கல்யாணராமன் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் மூலவர் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி வீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு ராம, நாம பூஜைகளும், 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள சின்மயா மிஷன் தபோவனத்தின் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், காயத்ரி மந்திரம், நவகிரக மந்திர ஜெப ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, 1,008 வடை மாலை சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது நடந்த சிறப்பு பூஜையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.