சென்னை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலால் உலக பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்த்திட முடிவு எடுத்துள்ளன.
இது, பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி உலகின் பல்வேறு நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி வருகிறார். அந்த வகையில் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்
கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மேட்டல் இங்க் நிறுவன தலைவர்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான உகந்த சூழல்களை பட்டியலிட்டு, தனித்தனியே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.