மதுரவாயல் கார்த்திகேயன் நகரில் சோபா, மெத்தை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சோபா மற்றும் மெத்தை தயாரிக்க பயன்படும் பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி நேற்று காலை சென்னை வந்தது.
மதுரவாயல், கார்த்திகேயன் நகர், ஆஞ்சநேயர் தெரு அருகே சென்ற போது மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பியில் கன்டெய்னர் லாரியின் மேல்பகுதி உரசியது. இதில் கன்டெய்னரில் மின்சாரம் பாய்ந்ததால் அதில் இருந்த பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் நாகராஜ் (வயது 39) கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், முதலில் அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் கன்டெய்னர் லாரியில் எரிந்த தீயை அணைத்தனர்.