ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016-17-ம் ஆண்டு ராபி பருவம் முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் ஆகிய சிறுதானியங்களுக்கு காப்பீடு செய்ய வருகிற 20-ந்தேதி கடைசி நாளாகும். இதில் சேர விரும்பும் விவசாயிகள் சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.84-ம், கம்பு பயிருக்கு ரூ.97.50-ம், கேழ்வரகு பயிருக்கு ரூ.116.25-ம், மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு ரூ.233.25-ம் பிரிமீயமாக செலுத்த வேண்டும்.
இதேபோல உளுந்து மற்றும் நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய 16.01.2020 கடைசி நாளாகும். ஏக்கர் ஒன்றுக்கு உளுந்து பயிருக்கு ரூ.236.25-ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.280.50-ம் பிரீமியமாக செலுத்த வேண்டும். இதுதவிர சூரியகாந்தி மற்றும் பருத்தி பயிருக்கு காப்பீடு செய்ய 20.01.2020 கடைசி நாளாகும். இதன்படி ஏக்கர் ஒன்றுக்கு சூரியகாந்தி பயிருக்கு ரூ.92.25-ம், பருத்திக்கு ரூ.1000-மும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன்பெறும் வங்கிகளில் கட்டாயமாக இத்திட்டத்தில் பதிவு செய்யப்படவேண்டும்.
கடன்பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்யலாம். பயிர் காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு விவரம் மற்றும் ஆதார் அட்டை விவரங்கள் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்யலாம். எனவே விவசாயிகள் சிறுதானியம், பயறு, எண்ணெய்வித்து, பருத்தி பயிருக்கு உரிய ஆவணங்களை கொண்டு உரிய காலகெடுவுக்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.