குளித்தலை,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலை காந்தி சிலை அருகே தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குளித்தலை கிளைத்தலைவர் முகமது ஹனிபா தலைமை தாங்கினார். இதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சிறியவர் முதல், பெரியவர்கள் வரையிலான முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல வேலாயுதம் பாளையம் ரவுண்டானா அருகே நொய்யல் சாலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதார்ஷாபாபு தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் காதர் முன்னிலை வகித்தார். தோட்டக்குறிச்சி சுன்னத் ஜமாத்முத்தவல்லி அலிபாதுஷா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முஜிபுர் ரகுமான் கலந்துகொண்டு, கிழக்கு டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த படுகொலையைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பேசினார். அப்போது போராட் டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர். இதில், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஜமாத் கமிட்டி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளர்கள், முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.