செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்துவதில் கருத்து வேறுபாடு, அவனியாபுரத்தில் சாலை மறியல்; 72 பேர் கைது

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதுதொடர்பாக 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மதுரை,

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் பாலமேட்டிலும், அதன் மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த போட்டிகளை காண பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் மதுரைக்கு வந்து செல்வார்கள். பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை ஒவ்வொரு ஆண்டும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் நடத்தி வந்தனர். இதற்கிடையில், கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்து வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தில் இருந்து பிரிந்த ஒரு தரப்பினர் புதிதாக அவனியாபுரம் கிராம கமிட்டி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். அதன்பின்னர் இரு அமைப்பினரும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதாக போட்டி போட்டுக்கொண்டு அழைப்பிதழை அச்சடித்து வினியோகம் செய்தனர். இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அரசு ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்தலாம் என்று உத்தரவிட்டனர். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

இந்தநிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக, தற்போது தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர், அவனியாபுரம் கிராம கமிட்டியினர் ஆகியோர் தனித்தனியாக அழைப்பிதழ் அச்சடித்தது வினியோகித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை சுமுகமாக நடத்த இரு தரப்பினரையும் அழைத்து கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் முன்னிலையில் சமரச கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில், தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அவனியாபுரம் கிராமத்திற்குட்பட்ட அனைத்து பிரிவினரையும் சேர்த்து குழு அமைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு அவனியாபுரம் கிராம மக்கள் கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அவனியாபுரம் கிராம மக்கள் கமிட்டி பெயரில் தான் நடத்த வேண்டும், அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவனியாபுரம்- விமானநிலைய சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து விட்டனர். இதனால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

இதுபோல், அம்பேத்கர் சிலை அருகிலும் பெண்கள் சிறிது நேரம் போராட்டம் நடத்தினர். அவர்களில் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த 2 போராட்டங்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது