பெங்களூரு,
பெங்களூரு நகரில் சேகரமாகும் குப்பைகளை முறையாக அகற்றுவது மாநகராட்சிக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் வீட்டில் சேரும் குப்பைகளை உலர் குப்பை, உலரா குப்பை என்று தரம் பிரித்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குப்பை தொட்டிகளில் குப்பைகளை வீசாமல் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக முன்னாள் ராணுவவீரர்கள் பணியமர்த்தப்பட்டு அபராதம் வசூலித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பெங்களூருவில் காலியாக உள்ள நிலங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி நிலங்களை அதன் உரிமையாளர்கள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காலி நிலங்களில் குப்பைகள் இருந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் வழிக்காட்டுதல் படி இந்த புதிய நடைமுறை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி காலி நிலங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தால் அதன் உரிமையாளருக்கு முதற்கட்டமாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்பிறகு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், அவர்கள் மீது கர்நாடக நகராட்சி சட்டத்தின்படி கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் நேற்று கூறுகையில், பெங்களூருவை சுத்தமாக வைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக காலி நிலங்களில் குப்பைகள் நிரம்பி இருந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. காலி நிலங்களை சுத்தம் செய்து கொள்ள 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது என்றார். இதன்மூலம் 15 நாட்களுக்கு பிறகு இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி பெங்களூரு மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ரன்தீப் கூறுகையில், மாநகராட்சி மேற்கொண்டு உள்ள இந்த நடவடிக்கையானது தங்களின் நிலத்தை சுத்தமாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.