செய்திகள்

கங்கைகொண்டான் நாற்கரசாலை ஓடைப்பாலத்தில் மினி லாரி கவிழ்ந்து டிரைவர் பலி கிளனர் படுகாயம்

கங்கைகொண்டான் நாற்கரசாலை ஓடைப்பாலத்தில் மினி லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார். கிளனர் படுகாயம் அடைந்தார்.

கயத்தாறு,

நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்தில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிச் சென்ற மினி லாரி, நாகர்கோவிலில் சென்று அவற்றை இறக்கியது. பின்னர் அந்த மினி லாரி நேற்று மதியம் அங்கிருந்து நாமக்கல்லுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தது.

அந்த மினி லாரியை கன்னியாகுமரி மாவட்டம் கண்ணுபிளாவிளை புலிக்கோடு முலமேடு பகுதியைச் சேர்ந்த மணி மகன் கனிஷ்குமார் (வயது 35) ஓட்டிச் சென்றார். அந்த மினி லாரியில் கிளனராக கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியடியைச் சேர்ந்த சசி (44) இருந்தார்.

நேற்று மதியம் 3 மணி அளவில் அந்த மினி லாரி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் வாகன சோதனைச்சாவடி அருகில் நாற்கரசாலை ஓடைப்பாலத்தில் சென்றது. அப்போது அந்த பாலத்தின் நடுவில் உள்ள இடைவெளியில் எதிர்பாராதவிதமாக மினி லாரி பாய்ந்து சென்று கவிழ்ந்தது. சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்ததால், பலத்த காயம் அடைந்த டிரைவர் கனிஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிளனர் சசி படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த சசியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான கனிஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நிகழ்ந்த ஓடைப்பாலத்தின் தடுப்பு சுவரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் மோதியது. இதில் சேதம் அடைந்த தடுப்பு சுவரை பின்னர் சீரமைக்கவில்லை. தற்போது அதே இடத்தில் மினி லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்துள்ளார். எனவே ஓடைப்பாலத்தில் சேதம் அடைந்த தடுப்பு சுவரை உடனே சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு