செய்திகள்

தூத்துக்குடியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ10கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் மேம்பாடு, சாலைகள் மேம்பாடு, குடிநீர் திட்ட மேம்பாடு, மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்காக்களை மேம்படுத்துதல், புதிய பூங்காக்கள் அமைத்தல், வாகன நிறுத்துமிடம் அமைத்தல், நவீன வணிக வளாகம் அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் 'ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்' அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மாநகராட்சி அலுவலக மாடியில் ரூ.10 கோடி செலவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சென்சார்கள்

இந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும். போக்குவரத்து நெருக்கடி, பஸ் கால அட்டவணை, வாகன நிறுத்தும் இட வசதி, குடிநீர் விநியோகம் போன்ற அனைத்து விதமான தகவல்களையும் இந்த மையம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

மேலும், பொதுமக்கள் அனைத்து விதமான புகார்களையும், தகவல்களையும் தெரிவிக்கலாம். அவைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்த்து வைக்கப்படும். அனைத்து துறை சார்ந்த தகவல்களும் இந்த மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான சேவைகள் துரிதமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக மாநகரின் முக்கிய பகுதிகளில் சென்சார்கள் பொருத்தப்படுகின்றன. அதே போன்று அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மாநகர் முழுவதும் ரோந்து வரும் போது, அந்த பகுதியில் உள்ள காட்சிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

கலந்துரையாடல்

இது தொடர்பாக மாநகராட்சி பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா தலைமை தாங்கி, கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ் ஆகியோர் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கும், இந்த மையம் எப்படி செயல்படும், மக்கள் அதனை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விளக்கி கூறினர்.

இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும், வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்தனர். இந்த ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்