தேசிய செய்திகள்

காஷ்மீர்: கூட்ட நெரிசலில் பலியான 12 பக்தர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிப்பு

காஷ்மீரில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலியான சம்பவத்தில் பிரதமர் மோடி மற்றும் காஷ்மீர் கவர்னர் இழப்பீடு அறிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். ஆங்கில புது வருட பிறப்பினை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதியருகே கோவில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.

அவர்களில் ஒரு பிரிவினரிடையே அதிகாலை 2.45 மணியளவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர். இதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. பலர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது பக்தர்கள் மிதித்து சென்றுள்ளனர். இதனால், பலர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி சமூக சுகாதார மையத்தின் மருத்துவர் கோபால் தத் கூறும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 13 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் நாராயணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

இந்த சம்பவம் பற்றி காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் மந்திரிகள் ஜிதேந்திரா சிங் மற்றும் நித்யானந்தராய் ஆகியோருடன் பேசியுள்ளேன். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறியுள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, காஷ்மீரில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

இதேபோன்று, காஷ்மீரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா அறிவித்து உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு