பாலசோர்,
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) ரஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான் மற்றும் கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிலம் மற்றும் வான் பரப்புகளில் இருந்து 2 பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் இன்று பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் முதல் ஏவுகணையானது ஒடிசாவின் நில பகுதியில் இருந்து ஏவப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றின் பெருமளவிலான உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரானவை ஆகும்.
இதேபோன்று மற்றொரு ஏவுகணையை இந்திய விமான படை பரிசோதனை செய்தது. இதன்படி, ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்டு மற்றும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் இந்திய விமான படைக்காக சுகோய் சூ-30எம்.கே.ஐ. விமானம் உருவாக்கப்பட்டது.
இந்த விமானத்தில் இருந்து கடல் பகுதியை இலக்காக கொண்டு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை ஏவப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த இரு ஏவுகணை பரிசோதனைகளும் வெற்றியடைந்து உள்ளன.