பானஜி,
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 62) நீண்ட காலமாக கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். இப்போது 15ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நலம் வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து, கோவா மாநிலத்தில் முதல்மந்திரி மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே காங்கிரஸ் ஆட்சிமைக்க உரிமை கோரியது.
இதற்கிடையில், கோவா பா.ஜனதா தலைவர்களுடன் கட்சியின் தேசியத்தலைவரான அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, மனோகர் பாரிக்கரே முதல் மந்திரியாக நீடிப்பார் என்று அறிவித்தார். இதனால், கோவா முதல் மந்திரி மாற்றப்படுவதான வெளியான ஊக தகவல்கள் சற்று அடங்கின. இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் அமைச்சரவையில் இருந்து 2 மந்திரிகள் நீக்கப்பட்டுள்ளதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதவி பறிக்கபட்ட இரண்டு மந்திரிகளும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பிரான்சிஸ் டி சவூசா மற்றும் பண்டூரங் மட்கைகர் ஆவர். இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டி சவூசா தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மடகைகார் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியைச்சேர்ந்த எம்.எல்.ஏக்கள் நிலேஷ் மற்றும் மிலாண்ட் நாயக் ஆகிய இருவரும் இன்று மாலை புதிய மந்திரிகளாக பதவியேற்பார்கள் முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.