ஜோத்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று ஒரே நாளில் திருமணம் செய்து கொள்ள இருந்த சகோதரிகள் இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீப் சிங் என்பவரது மகள்கள் ஷோபா (25 வயது) மற்றும் விம்லா (23 வயது). இருவரும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். இருவருக்கும் நேற்று ஒரே நாளில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு சிலமணி நேரங்கள் முன்னதாக நேற்று அதிகாலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயன்றுள்ளனர்.
உயிருக்கு போராடிய அவர்களை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் இருவரின் உடல்களையும் அவசர அவசரமாக தகனம் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. சகோதரிகளின் தற்கொலைக்கு அவர்களது தந்தையின் குடும்பத்தினர்தான் காரணம் என்று அவர்களது தாய்மாமா ஜஸ்வந்த் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த பெண்களுக்கு ஏற்கெனவே ஒரு குடும்பத்துடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு அது கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் திருமணத்தை ஏற்பாடு செய்ய தீப் சிங்கின் சகோதரர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த அழுத்தத்தின் காரணமாகவே, சகோதரிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.