தூங்கிக்கொண்டு இருந்தனர்
மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்துக்கு உட்பட்ட மதுசூதன்கரை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் குஜராத்தில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆமதாபாத் நகரில் வசித்து வருகின்றனர்.அந்தவகையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 9 பேர் அங்குள்ள ஒரு அறையில் தங்கியிருந்தனர். கடந்த 20-ந்தேதி இரவில் அவர்கள் அனைவரும்
தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்களது அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து கொண்டிருந்தது.
சிலிண்டர் வெடித்தது
இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், அது குறித்து தெரிவிப்பதற்காக, அந்த தொழிலாளர்களின் அறைக்கு சென்று கதவை தட்டினார். இதைக்கேட்டு எழுந்த தொழிலாளர் ஒருவர் அறையின் மின் விளக்கை எரிய விட்டார்.இதில் ஏற்பட்ட தீப்பொறியால் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ பிடித்தது. இதில் அறை முழுவதும் தீ பரவியதால், அங்கே தூங்கிக்கொண்டிருந்த 4 குழந்தைகள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் என 10 பேரும் தீயில் சிக்கினர்.
அடுத்தடுத்து சாவு
இதில் படுகாயமடைந்த 10 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் இதில் சிகிச்சை பலனின்றி 3 பேர் 22-ந்தேதியும், 5 பேர் 23-ந்தேதியுமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். நேற்று காலையில் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
சிவராஜ் சிங் சவுகான் இரங்கல்
கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடும் அவர் அறிவித்து உள்ளார்.
இதைப்போல மாநில கவர்னர் மங்குபாய் படேலும் இரங்கல் வெளியிட்டு உள்ளார்.