புனே,
மராட்டியத்தில் முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசில், 2 துணை முதல்-மந்திரிகள் பதவியில் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஏக்நாத் ஷிண்டே. மற்றொருவர் அஜித் பவார். மராட்டியத்தில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான பிரசாரம் மேற்கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக சார்ட்டர்டு விமானத்தில் இன்று காலை புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.
இந்த நிலையில், விமானம் பாராமதி நகரில் ஓடுதளத்தில் காலை 8.48 மணியளவில் தரையிறங்கியபோது திடீரென விபத்தில் சிக்கியது. இதில், விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த துயர சம்பவத்தில் சிக்கி, அஜித் பவார் உள்ளிட்ட 5 பேரும் பலியானார்கள்.
அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி சச்சின் தெண்டுல்கர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், அஜித் பவார்ஜி திடீர் மறைவு என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மாநிலம் முழுவதும் உள்ள, மக்களுக்காகவே உழைத்த அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை மராட்டியம் இழந்து விட்டது.
அஜித் பவார், மூத்த அரசியல்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) நிறுவனரான சரத் பவாரின் மருமகன் ஆவார். மக்களவை எம்.பி. சுப்ரியா சுலேவின் உறவினரும் ஆவார். அவருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய் பவார் மற்றும் பார்த் பவார் என 2 மகன்களும் உள்ளனர்.
அஜித் பவார், தன்னுடைய மாமாவான சரத் பவாருடன் இணைந்து 1991-ம் ஆண்டில் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அவருடனேயே நீண்டகாலம் தொடர்ந்து பணியாற்றினார். 7 முறை அஜித் பவார் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார்.
1991-ம் ஆண்டில் முதன்முறையாக எம்.எல்.ஏ.வான பின்னர் 1995, 1999, 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக இருந்து சாதனை படைத்திருக்கிறார். இந்த சூழலில், 2019-ம் ஆண்டு சரத் பவாரின் கட்சியில் இருந்து விலகி, தனி அணியாக பிரிந்ததுடன், பா.ஜ.க. தலைமையிலான அரசில் இணைந்து, துணை முதல்-மந்திரியானார்.
அஜித் பவார் அணிக்கு 2024-ல் கட்சி பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. மராட்டிய அரசியலில் சக்தி வாய்ந்த நபராக அறியப்பட்ட அவருடைய மறைவால், அவருடைய அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் விமான விபத்து புலனாய்வு வாரியத்தின் குழுக்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றன. மராட்டியத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.