புதுடெல்லி,
டெல்லியின் விகாஸ் மார்க் பகுதியில் அல்கொய்தா பயங்கரவாதி ஒருவர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு அந்த பயங்கரவாதியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் சவுமன் ஹக் (வயது 27) என்று தெரியவந்தது. பின்னர் அவரை உள்ளூர் கோர்ட்டு ஒன்றில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 30ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு கூடுதல் செசன்ஸ் நீதிபதி சித்தார்த் சர்மா உத்தரவிட்டார்.
இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் அல்-கொய்தா அமைப்புக்கு ஆட்களை சேர்க்கவும், ரோஹிங்யா அகதிகளை பயங்கரவாதிகளாக்கும் திட்டத்திற்காக வந்தவன் எனவும் டெல்லி போலீஸ் தெரிவித்து உள்ளது.
போலீஸ் விசாரணையில் வங்காளதேச வம்சாவளி பயங்கரவாதி போலியான வாக்காளர் அடையாளம் அட்டை வைத்திருந்ததும் தெரியவந்து உள்ளது. சவுமன் ஹக் என தன்னுடைய பெயரை தவறாக கூறி போலீசை தவறாக வழிநடத்த முயற்சி செய்து உள்ளார். விசாரணையில் அவருடைய உண்மையான பெயர் சாமின் ரகுமான் என்ற ராஜு பாய் என தெரியவந்து உள்ளது. ஜூலையில் இருந்து டெல்லி சிறப்பு போலீஸ் ராஜு பாய் குறித்தான தகவல்களை திரட்டி உள்ளது. ராஜு பாயை பிடிக்க தேவையான நடவடிக்கையை எடுத்து உள்ளது.
பயங்கரவாதி சவுமன் ஹக் டெல்லியில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்க செயல்பாட்டை தொடங்க முயற்சி செய்து உள்ளான். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆட்சேர்ப்பு மற்றும் நிதி சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜு பாயிடம் இருந்து போலீஸ் துப்பாக்கி, செல்போன்கள், லேப்-டாப், அமெரிக்க மற்றும் வங்காளதேச பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அல்-கொய்தா முகாமில் பயிற்சி பெற்று சிரியாவில் அரசுக்கு எதிராக போரிட்டவன் என தெரியவந்து உள்ளது.
துருக்கி, சிரியா, வங்காளதேசம் சென்றுவிட்டு இந்தியாவிற்கு வந்து பயங்கரவாத நடவடிக்கையை தொடங்க ஏற்பாடுகளை செய்து உள்ளான். 2013-ம் ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த ராஜு பாய், கடந்த 2014-ல் வங்காளதேசம் திரும்பிய போது கைது செய்யப்பட்டான். அங்கும் இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் இணைய தூண்டியதாக கைது செய்யப்பட்டு உள்ளான். மியான்மர் ராணுவத்திற்கு எதிராக போரிட இளைஞர்களை பயங்கரவாத பாதைக்கு இழுத்து உள்ளான் என குற்றச்சாட்டு உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது.
இவ்வருடம் ஏப்ரலில் தான் வங்காளதேச சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளான். பின்னர் இந்தியாவிற்கு திரும்பிஉள்ளான்.
மணிப்பூர் மற்றும் மிசோரமில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சிக்கொடுக்க முகாம்களை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து உள்ளான். இந்தியாவிற்கு வந்தபோது ஜார்க்கண்ட், பிகார் மற்றும் என்சிஆரில் (தேசிய தலைமை பிராந்தியம்) பல்வேறு மதரஸாக்களில் தங்கிஉள்ளான் எனவும் போலீஸ் தெரிவித்து உள்ளது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அல்-கொய்தா பயங்கரவாத இயக்கங்களுக்கு இளைஞர்களை இழுக்க சமூக வலைதளங்களில் தொடர்பு வைத்து உள்ளான் எனவும் விசாரணை தொடர்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.