புதுடெல்லி,
மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அருண் கோயல் அவசரகதியாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது ஏன் என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் நியமனங்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் அரசியலைமைப்பை கிழிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அனைத்திந்திய காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் பவன் கீரா தனது டுவிட்டரில், "புதிய தேர்தல் ஆணையர் நியமனம் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாக சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது. இது ஒன்றும் புதிதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து நியமனங்களும், நியமன முடிவுகளும் அரசியலமைப்பை கிழிக்கும் விதமாகவே உள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.