பெங்களூரு,
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புனித் ராஜ்குமார். 46 வயதான இவர் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினரை மட்டுமின்றி ரசிகர்கள் மற்றும் கன்னட மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனித் ராஜ்குமார் ஆதரவற்றோருக்கும், ஏழை-எளியோருக்கும் ஏராளமான உதவிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் அவர் மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கடந்த 16 நாட்களாக ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு புனித் ராஜ்குமாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.