ஜெய்பூர்,
இந்தியாவின் வடக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனையடுத்து எப்போதும் இல்லாத நிகழ்வாக இன்று காலையில் பயங்கரமான புழுதிப் புயல் தாக்கியது. மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியில் மழை பெய்து உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கோதுமை பயிர்கள் நாசமாகி உள்ளது.
மழை மற்றும் புயல் தாக்கிய இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தது. மரங்கள், மின்சார கம்பங்கள் விழுந்து உள்ளது. புழுதிப் புயல் காரணமாக நேரிட்ட விபத்து சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசம், ராஜஸ்தானை மற்றொரு புழுதிப் புயல் தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து உள்ளது.
காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பாலியா, காசியாபூர், அம்பேத்கார் நகர், எஸ்கே நகர், பாஸ்தி, கிருஷ்ணாநகர், மகராஜ்காஞ், சித்தார்த்நகர், குண்டா, பால்ராம்பூர், அலிகார்க், எடாக், பிஜ்னோர், பாக்பாத் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்திய வானிலை மைய ஆய்வாளர் ஹிமான்சு சர்மா பேசுகையில், ராஜஸ்தானில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக அதிவேகமாக காற்று அடிக்க வாய்ப்பு உள்ளது, மற்றொரு புழுதிப் புயலுக்கு இது வழிவகை செய்யும். இந்த புழுதிப் புயல் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது, என கூறிஉள்ளார். ராஜஸ்தான் பகுதியில் காற்றழுத்தம் உருவாகி வருகிறது என்பதை சேட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகிறது, இது அதிவேக காற்று மற்றும் புழுதிப் புயலுக்கு வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.