புதுடெல்லி,
மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் தெம்மேட்டர் என்ற இடத்தில் 31-ந் தேதி மாலை பஸ் ஊழியர் ஒருவர் உள்ளூர் பொதுமக்களால் தாக்கப்பட்டார். அவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானதால், பஸ் டிரைவர்கள் திரண்டனர். இதில் கலவரம் மூண்டது. கல்வீச்சு நடந்தது. போலீஸ் படை விரைந்து வந்து கூட்டத்தை விரட்டியடிக்க கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். போலீசார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கு பல இடங்களுக்கும் கலவரம் பரவியது. இந்தப்பிரச்சினை பழங்குடியினர் மற்றும் பழங்குடியின அல்லாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலாக வெடித்தது. இதையடுத்து, நிலைமை மோசமானதால் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இணையதள சேவை முடக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மோதல் ஏற்பட்டதால் பதட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கொடி அணி வகுப்பு நடத்த ராணுவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணை ராணுவ வீரர்கள் ஆயிரம் பேர் ஷில்லாங் விரைந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.