யாங்கன்,
மியான்மர் நாட்டின் வடக்கே கச்சின் மாநிலத்தில் தங்கம், பச்சை மாணிக்க கல் ஆகியவற்றிற்கான சுரங்கங்கள் உள்ளன. இங்கு பழங்குடியின மக்களான ரவாங் பிரிவினர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பகுதியில் கனமழை பெய்து வந்துள்ளது. இதில், செட் மூ என்ற பகுதியில் அமைந்த பச்சை மாணிக்க கல்லுக்கான சுரங்கத்தில் நில சரிவு ஏற்பட்டு உள்ளது. இதற்குள் சிக்கி 27 தொழிலாளர்கள் பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது.
எனினும் எந்த உடல்களும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் செஞ்சிலுவை அமைப்பு மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து இன்று மீண்டும் தேடுதல் பணி நடைபெறும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் கச்சின் மாநிலத்தின் பகந்த் பகுதியில் ஏற்பட்ட நில சரிவில் 100க்கும் கூடுதலானோர் பலியாகினர். இந்த வருடம் நடந்த நில சரிவுகளில் சிக்கி 12க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.