புதுடெல்லி
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா மேனன் பார்க்கில் உள்ள வாஜ்பாய் வீட்டில் அவரது உடலுக்கு இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு உடல் அங்கிருந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் அவரது உடல் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.
வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்- மந்திரிகள், கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவர். அவருக்கு நமீதா கவுர் பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மட்டும் உள்ளார்.