கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் படுரியா என்ற பகுதியில் கடந்த 3-ம் தேதி மாலை திடீரென இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
முகநூலில் ஹோலி தொடர்பான பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ஒன்று வெளியானதால் இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்களும், மோதல்களும் ஏற்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த மாநில போலீசாருக்கு உதவியாக துணை ராணுவம் சென்றது. படுரியாவில் தொடர்ந்து பதட்டமான நிலையே நீடித்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிலை கட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே படுரியா மத கலவரத்தில் நேரிட்ட சம்பவம் என பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் பாரதீய ஜனதாவை சாடினார். மாநிலத்தில் மதவாத விரோதத்தை ஏற்படுத்த சமூக வலைதளங்களில் பாரதீய ஜனதா மிகவும் ஆட்சேபிக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது என குற்றம் சாட்டினார். இவர்களை மேற்கு வங்காள மாநில மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள், போலி செய்திகள் அவர்களின் அரசியல் முடிவுக்கானது. நாங்கள் பேஸ்புக்கிற்கு மதிப்பளிக்கிறோம், ஆனால் பேக்புக்கிற்கு மதிப்பளிக்க மாட்டோம் என்றார் மம்தா பானர்ஜி.
இதற்கிடையே மேற்கு வங்காள மாநிலத்திற்கு அவதூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
ஆட்சேபிக்கக்கூடிய வீடியோக்கள், புகைப்படங்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார். இந்நிலையில் அம்மாநில சிஐடி போலீஸ் மேற்கு வங்காள மாநில பாரதீய ஜனதாவின் ஐடி பிரிவு செயலாளர் தருண் சென்குப்தாவை கைது செய்து உள்ளது. போலியான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சூரி போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் அவருக்கு எதிராக அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம், என போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்காளத்தில் மத பதற்றத்தை அதிகரிக்க செய்யும் விதமாக போலி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு உள்ளார் என குற்றம் சாட்டப்பட்டு தருண் சென்குப்தா கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கு மாநில பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் சயான்தான் பாசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார், நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கடந்த சில நாட்களில் கைது செய்யப்படும் மூன்றாவது நபர் இவராவார். சமீபத்தில் சோனாபூரில் இருந்து ஒருவரை போலீஸ் கைது செய்தது. பெண் ஒருவருக்கு ஆண்கள் பாலியல் தொல்லைக் கொடுக்கும் போஜ்பூரி பட காட்சியை வெளியிட்டு உள்ளார். இது சமீபத்தில் மத கலவரம் வெடித்த படுரியவில் நடந்தது என அதிகமான பா.ஜனதா தலைவர்களால் பகிரப்பட்டது. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருபவர்களை அம்மாநில போலீஸ் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.