கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசுக்கும், கவர்னர் ஜக்தீப் தங்காருக்கும் இடையே நல்லுறவு இல்லை.
இந்த நிலையில் அங்கு பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலையில் கவர்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன.
இவற்றின்படி, பல்கலைக்கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் தலையிட முடியாது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கவர்னர் ஜக்தீப் தங்கார், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
ஆனால் அங்கு குடியுரிமை சட்ட விவகாரத்தில் மாணவர்களும், ஊழியர்களும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். எனவே நடக்க வேண்டிய கூட்டத்தை கவர்னர் மாளிகைக்கு மாற்றும்படி துணைவேந்தரை கவர்னர் கேட்டுகொண்டார்.
ஆனால் கூட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டதால் அதில் பங்கேற்றிருந்தவர்கள் கவர்னரின் வேண்டுகோளை ஏற்காமல் நிராகரித்து விட்டனர்.
இந்த நிலையில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் வருடாந்திர பட்டளிப்பு விழாவுக்கு நேற்று ஏற்பாடு ஆகி இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, கவர்னர் ஜக்தீப் தங்கார் சென்றார்.
ஆனால் பல்கலைக்கழகத்திற்குள் அவர் நுழைய முடியாதபடிக்கு மாணவர்கள் கருப்புக்கொடிகளுடன் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வர்த்தக பிரிவின் துணை அமைப்பான சிக்ஷா பந்து சமிதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
ஒரு கட்டத்தில் கவர்னர் ஜக்தீப் தங்கார் விழா அரங்குக்கு செல்வதற்காக காரில் இருந்து இறங்கியபோது, போராட்டக்காரர்கள் அவரை நோக்கி திரும்பி போ திரும்பி போ, தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம், குடியுரிமை திருத்த சட்டம் வேண்டாம் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டக்காரர்கள் இடைவிடாமல் கோஷங்கள் போட்டதைத் தொடர்ந்து கவர்னர் ஜக்தீப் தங்கார், பல்கலைக்கழக துணைவேந்தர் சுரஞ்சன் தாசுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதைத் தொடர்ந்து அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அவர் அங்கிருந்த நிருபர்களுக்கு ஆவேசமாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இத்தகைய செயல்பாட்டை இங்கு அனுமதிக்க முடியாது. முழுமையான சட்ட விரோதம் கூடாது. ஆனால் இங்கு சட்டத்தின் ஆட்சி முற்றிலும் குலைந்து போய் இருக்கிறது.
மாணவர்களின் எதிர்காலத்துடன் ஒரு சிறிய குழு எப்படி விளையாட முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. போராட்டம் நடத்தியவர்களில் ஒருவர்கூட மாணவர் கிடையாது. இது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது.
பல்கலைக்கழக நிர்வாகம் மொத்தத்தில் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் ஊழியர்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் ஜக்தீப் தங்கார் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் திரும்பிச்சென்றபோதும் அவர் இல்லாமலேயே நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்தன. இது பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
அதைத் தொடர்ந்து கவர்னர் ஜக்தீப் தங்கார் டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருந்ததாவது:-
பட்டமளிப்பு விழாவை பொறுத்தமட்டில் விதிமுறைகளின்படியும், என் அறிவுரையின்படியும் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் துணைவேந்தருக்கு உத்தரவிட்டேன். ஆனாலும்கூட பட்டமளிப்பு விழா தொடங்கப்பட்டுள்ளது. வேறு வழியற்ற நிலையில் வெளியேறி விட்டேன். சம்மந்தப்பட்டவர்கள் ஆன்ம தேடுதலை செய்ய வேண்டும்.
துணைவேந்தர் செயலற்றவராக இருக்கிறார். அவர் அமைதியான பார்வையாளராக இருக்கிறார். நடந்ததெல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி எங்கும் இருப்பதாகவே தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.