புதுடெல்லி,
மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தால், அதை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த ஜூன் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க மறுத்த நீதிபதிகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மத்திய வேளாண் அமைச்சகம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், இந்த வழக்கில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பதில் அளிக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய அரசு அந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு கூறினார்கள். மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அனைத்து மனுதாரர்களையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைக்குமாறு கூறி விசாரணையை இன்று 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இன்று இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வந்தது அப்போது 8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அறிக்கையில் 8 வழி சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன? என்பது தொடர்பான விவரங்கள் இடம் பெற்று உள்ளன. இதை தொடர்ந்து வழக்கு ஆகஸ்ட் 7 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.