முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பேச விரும்பவில்லை
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, அங்குள்ள சில விசாரணை அமைப்புகள் அவரை சந்தித்து பிட்காயின் முறைகேடு குறித்து விவரங்களை வழங்கியுள்ளனர். இதனால் அங்கு அவருக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. அதனால் இந்த முறைகேடுகள் குறித்த விசாரணையை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவர் மவுனமாக இருப்பதால் இதை கண்டுகொள்ள மாட்டார் என்று அர்த்தம் இல்லை.
பிட்காயின் விவகாரம் முக்கியமானது. அதனால் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் எச்சரிக்கையாக பேச வேண்டும். நான் அவ்வாறு பேச விரும்பவில்லை. ரூ.58 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. எனக்கு கிடைத்த தகவல்படி ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணாவை 8 முதல் 10 முறை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் 15 நாட்கள் எனக்கு காலஅவகாசம் கொடுங்கள். இதுகுறித்து முழுமையான தகவல்களை வழங்குகிறேன்.
திசை திருப்புவது வேண்டாம்
ஜன்தன் வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடியது குறித்தும் நான் கூறியுள்ளேன். இந்த விஷயத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் அதை திசை திருப்புவது வேண்டாம். எந்த அரசியல் தலைவருக்கும், அதிகாரிக்கும் பண பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை காங்கிரஸ் தலைவர்கள் கூற வேண்டும்.
அப்போது மக்களுக்கு சரியான தகவல் கிடைத்துவிடும். இந்த பிட்காயின் முறைகேடு கடந்த 2016-ம் ஆண்டே தொடங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு ஒரு ஓட்டலில் மோதல் ஏற்பட்டது. அது 2 பேருக்கு இடையே நடந்த மோதல் அல்ல என்று நான் அப்போதே கூறினேன். அப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருந்தது. அந்த சம்பவத்தின்போது ஸ்ரீகிருஷ்ணாவும் அங்கு இருந்தார் என்பது எனக்கு தெரியும்.
நம்பிக்கை துரோகம்
அப்போது ஸ்ரீகிருஷ்ணாவை ஏன் கைது செய்யவில்லை. எங்கள் கட்சி குடும்ப அரசியலை செய்வதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். பா.ஜனதா எந்த அரசியலை செய்கிறது. அந்த கட்சியில் குடும்ப அரசியல் இல்லையா?. மக்கள் பிரதிநிதிகளை பணம் கொடுத்து வாங்கியது எந்த கட்சி?. சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்க முடியாமல் பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது எந்த கட்சி?. கட்சிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு சென்றால், கட்சியை காப்பாற்ற நாங்கள் என்ன செய்ய வேண்டும்?.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.