தேசிய செய்திகள்

எடியூரப்பா வழிகாட்டுதலில் பா.ஜனதா தலைவர்கள் செயல்படுவார்கள்; நேரில் சந்தித்த பிறகு மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேட்டி

எடியூரப்பா வழிகாட்டுதலில் பா.ஜனதா தலைவர்கள் செயல்படுவார்கள் என்று மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறியுள்ளார்.

பெங்களூரு:

வாழ்த்து தெரிவித்தார்

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதாவின் உச்சபட்ச அதிகாரமிக்க அமைப்பான உயர்நிலை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட மந்திகள் மற்றும் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகம் வந்த பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் நேற்று எடியூரப்பாவை அவரது காவேரி இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு அருண்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்கள் செல்வாக்கு

கர்நாடகத்தில் எங்கள் கட்சியில் மூத்த தலைவர் எடியூரப்பா ஒருவர்தான் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவராக உள்ளார். அவரது பலத்தை பயன்படுத்தி கொண்டு கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க நாங்கள் முயற்சி செய்வோம். எடியூரப்பா மிக முக்கியமான தலைவர் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அவரது பலம் என்ன என்பது மக்களுக்கு தெரியும்.

தென்இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் கட்சியை அடிமட்டத்தில் இருந்து கட்டமைத்து வளர்த்து ஆட்சியில் அமர்த்தியவர் எடியூரப்பா. அதனால் அவருக்கு எங்கள் கட்சி உயர்ந்த அதிகார அமைப்பில் பதவி வழங்கியுள்ளது. அவர் 4 முறை முதல்-மந்திரியாகவும், 3 முறை எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார். எடியூரப்பாவுக்கு புதிய பதவி வழங்கி இருப்பதன் மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

சட்டப்படி தண்டனை

அவரது அரசியல் அனுபவம் எங்கள் கட்சிக்கு பெரிய அளவில் ஆதாயத்தை தரும். கர்நாடகம் மட்டுமின்றி தென்இந்திய மாநிலங்களில் பா.ஜனதா மேலும் பலம் பெறும். எடியூரப்பா வழிகாட்டுதலில் பா.ஜனதா தலைவர்கள் செயல்படுவார்கள். எடியூரப்பாவுக்கு பதவி வழங்கி இருப்பதால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எடியூரப்பா தேவை. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். காங்கிரஸ் கட்சி சித்தராமையா பெயரில் மாநாடு நடத்தியுள்ளது. ஆனால் பா.ஜனதா மக்கள் பெயரில் மாநாடு நடத்தும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் எங்கள் கட்சி நிர்வாகி பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கும்.

இவ்வாறு அருண்சிங் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்