மீன்பிடிக்க சென்றனர்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் சிலர் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு சென்றனர். கடலில் மீன்பிடித்துக் கொண்டு அவர்கள் நேற்று காலையில் கரைக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மங்களூரு துறைமுகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, துளு வகையைச் சேர்ந்த ஒரு ராட்சத மீன் அதிவேகமாக வந்து விசைப்படகின் மீது மோதியது.
அந்த மீன் மோதிய வேகத்தில் விசைப்படகு சேதம் அடைந்தது. மீன் மோதிய வேகத்தில் படகே ஒரு நிமிடம் நிலைதடுமாறியது. படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் படகைச் சுற்றி கடலில் பார்த்தனர். அப்போது ஒரு ராட்சத மீன் படகு மீது மோதி இருப்பதையும், அதனால் படகு சேதம் அடைந்து இருப்பதையும் கண்டறிந்தனர்.
சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
மேலும் படகு மீது மோதியதால் மீனுக்கு மூக்குப்பகுதியில் பலத்த காயம் அடைந்திருந்ததை மீனவர்கள் பார்த்தனர். அதுமட்டுமின்றி காயம் அடைந்ததால் ஏராளமான ரத்தம் மீனின் மூக்குப்பகுதியில் இருந்து வடிந்திருந்தது. இதையடுத்து மீனவர்கள் தங்களது செல்போன்களில் அந்த மீனை வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் படகை சுற்றி, சுற்றி மோதி வந்த அந்த மீன், பின்னர் ஆழ்கடலுக்கு சென்றுவிட்டது.
இதையடுத்து மீனவர்கள் அந்த ராட்சத மீனின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் அந்த மீன் மோதியதால் படகில் சேதமடைந்திருந்த பகுதியையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் படகு பெரிய அளவில் சேதம் அடையவில்லை. அதனால் மீனவர்கள் அதே படகில் கரைக்கு வந்து சேர்ந்தனர்.