கொல்கத்தா,
வங்கக்கடலில் அந்தமானுக்கு வடமேற்கில் உருவான புல்புல் புயல் மேற்கு வங்காள மாநிலத்தை அச்சுறுத்தி வந்தது. 2 நாட்களாக அங்கு பலத்த மழை பெய்து வந்தது.
இந்த புயல், கொல்கத்தாவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள சாகர் தீவில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு கரையைக் கடந்தது. அந்தப் புயல் வங்காளதேசத்துக்கு சென்றது.
இந்தப் புயல் மேற்கு வங்காள மாநிலத்தில் ருத்ரதாண்டவமாடி விட்டது. பக்காளி, நம்கானா, காக்துவிப், சாகர்த்விப் பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவில் மட்டும் 2 நாட்களில் புல் புல் புயல் 104 மி.மீ. மழையைத் தந்தது. மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. திகா, ஹவுரா, ஹூக்ளி, 24 பர்கானா, மெடினிபூர் பகுதிகளில் காற்று மணிக்கு 100 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக வீசியது.
நம்கானாவில் 2 படகுத்துறைகள் நாசமாயின.
நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வினியோகம் தடைப்பட்டது. தொலைதொடர்பு சேவை முடங்கியது. பயிர்கள் சேதம் அடைந்தன.
2,500 வீடுகள் இடிந்து விழுந்தன. 26 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன.
கொல்கத்தா கிரிக்கெட் மற்றும் கால்பந்து கிளப்பில் பணியாற்றி வந்த 28 வயதான வாலிபர் மீது மரக்கிளை ஒன்று உடைந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நம்கானாவில் மற்றொருவர் பலியானார்.
வடக்கு பர்கானாவில் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, புர்பா மகாலா கிராமத்தில் சுசித்ரா மண்டல் என்ற மூதாட்டி மரம் விழுந்து பலியானார். கோக்னா கிராமத்தில் ரேபா பிஸ்வாஸ் (வயது 47) என்பவர் மரம் விழுந்து உயிரிழந்தார். இதே போல் மனிருல் காஜி (59) என்பவர் கீழே விழுந்து கிடந்த மின்கம்பத்தை மிதித்து மின்சாரம் பாய்ந்து பலியானார். மேலும் 2 பேர் மரம் விழுந்தும், சுவர் இடிந்துவிழுந்தும் உயிரிழந்தனர் என்று குறிப்பிட்டார்.