தேசிய செய்திகள்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி விசாரணையில் இருந்து விலகினார்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி விசாரணையில் இருந்து விலகினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் பெற தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், வக்கீல் பி.குமார், மல்லிகார்ஜூனா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடத்தப்படும் என டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் வக்கீல் பி.குமார் மீது மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணைக்கு தடைகோரிய மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவருக்கு எதிராக விசாரணை நடத்த தடை விதித்தது.

அதேபோல டி.டி.வி. தினகரன் தன் மீது பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் நடைபெறும் வழக்கின் விசாரணைக்கு தடைகோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடைகோரியும் தொடரப்பட்ட மனுக்கள் மீது இறுதி உத்தரவு பிறப்பித்து மனு முடித்து வைக்கப்படும் என வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சுனில் கவுர் தெரிவித்தார். இந்தநிலையில் இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் மற்றொரு நீதிபதியான மனோஜ்குமார் ஓரி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.டி.வி.தினகரன் மனு மீதான விசாரணையில் இருந்து தனிப்பட்ட காரணத்துக்காக விலகுவதாக நீதிபதி மனோஜ்குமார் ஓரி தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை வேறு அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது