புதுடெல்லி,
கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் வகையில் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை கடந்த 1990 ஜூன் 2ந் தேதிஅமைத்தது.
இந்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்ரவரி 2ந் தேதியன்று காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை வெளியிட்டது.
இந்த இறுதி தீர்ப்பின் மீது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் மத்திய அரசு சில விளக்கங்களை கோரி கடந்த 2007ம் ஆண்டில் விளக்கம் கோரும் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த மனுக்களின் மீதான அறிக்கையை காவிரி நடுவர் மன்றம் இதுவரை மத்திய அரசுக்கு தாக்கல் செய்யவில்லை. இந்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கான தேதியை மத்திய அரசு பலமுறை நீட்டித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நடுவர் மன்றம் அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனாலும் காவிரி நடுவர் மன்றம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 6 மாத காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.