புதுடெல்லி,
மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் கடும் வறட்சிக்கு ஆளாகின. இமாசலபிரதேசம் கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. உத்தரபிரதேச மாநிலத்தில் மழை, வெள்ளம் காரணமாக பாதிப்பு நேரிட்டது. புதுச்சேரி புயலினால் பாதிக்கப்பட்டது. இப்படி இயற்கை பேரிடரின் பிடியில் சிக்கி பாதிப்புக்கு ஆளான மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது.
மாநிலங்களின் கோரிக்கை தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் அதிகாரக்குழு கூடி, பரிசீலித்து நிவாரண நிதி வழங்க அனுமதி அளித்தது. அதன்படி வறட்சி பாதித்த மராட்டியத்துக்கு ரூ.4,714 கோடியே 28 லட்சம், கர்நாடகத்துக்கு ரூ.949 கோடியே 49 லட்சம், ஆந்திராவுக்கு ரூ.900 கோடியே 40 லட்சம், குஜராத்துக்கு ரூ.127 கோடியே 60 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இமாசல பிரதேசத்துக்கு ரூ.317 கோடியே 44 லட்சம் வழங்கப்படும். உத்தரபிரதேசத்துக்கு ரூ.191 கோடியே 73 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. புதுச்சேரிக்கு ரூ.13 கோடியே 9 லட்சம் நிவாரணம் தரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.