தேசிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு மத்திய மந்திரிகள் அஞ்சலி: மாநில முதல்-மந்திரிகளும் புகழாரம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 4-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

புதுடெல்லி,

இந்தியாவின் ஏவுகணை மனிதன் என அன்போடு அழைக்கப்பட்ட அப்துல் கலாம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி காலமானார். இந்திய அறிவியலில் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கிய அவர், 2002-ம் ஆண்டு முதல் 2007 வரை ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார். அந்த பதவியிலும் சிறப்பாக விளங்கிய அவர், மக்களின் ஜனாதிபதி என புகழப்பட்டார்.

முன்னாள் அப்துல் கலாமின் 4-வது ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சிகள், தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இதில் மத்திய மந்திரிகள், மாநில முதல்- மந்திரிகளும் அடங்குவர்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் தளத்தில், நமது முன்னாள் ஜனாதிபதி, பாரத ரத்னா அப்துல் கலாமின் புண்ணிய திதி நாளில் அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானியும், மிகப்பெரிய உந்துசக்தியாளரும் ஆவார். அவரது போதனைகள் அனைத்தும் லட்சக்கணக்கான மக்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் அவரது மிகச்சிறந்த பங்களிப்பை தேசம் ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட அஞ்சலி குறிப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர் மிகப்பெரும் ஆசிரியரும், தலைசிறந்த விஞ்ஞானியும் ஆவார். பாரத ரத்னா. என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் ஸ்மிரிதி இரானி, கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்ட மத்திய மந்திரிகளும் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், 4 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா தனது ஏவுகணை மனிதனை இழந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு எனது இதயப்பூர்வ அஞ்சலியை செலுத்துகிறேன். அவர் நமக்கு கனவு காண கற்றுத்தந்தார். ஐயா, லட்சக்கணக்கான மக்களுக்கு நீங்கள் எப்போதும் உந்துசக்தியாக விளங்குவீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாரத தாயின் உண்மையான மகன்களில் அப்துல் கலாமும் ஒருவர் எனக்கூறியுள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அவரது திறமையும், சேவையும் இந்தியாவுக்கு பூமியிலும், விண்வெளியிலும் ஒரு பெயரை பெற்றுத்தந்தது என புகழாரம் சூட்டி உள்ளார். முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதற்கு அவரது வாழ்வு தகுதியானது என்றும் தெரிவித்து உள்ளார்.

இவர்களை தவிர அசோக் கெலாட், கமல்நாத், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி போன்ற முதல்-மந்திரிகளும் அப்துல் கலாமுக்கு அஞ்சலி குறிப்பு வெளியிட்டு உள்ளனர்.

அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் ஏவுகணை நாயகன் என அறியப்பட்டவர், அப்துல் கலாம். அவர் கடந்த 1960-ம் ஆண்டு முதல் 1999 வரை இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., ஏவுகணை திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய பங்காற்றினார். நாட்டின் 11-வது ஜனாதிபதியாகவும் பதவி வகித்த அவர், பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்மபூஷண் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது நினைவுநாளில் அவரை நாங்கள் நினைவுகூருகிறோம் என்று குறிப்பிட்டு உள்ளது.

பா.ஜனதா தனது டுவிட்டர் தளத்தில், ஏவுகணை மனிதனுக்கு எங்கள் தாழ்மையான அஞ்சலி. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா அப்துல்கலாமின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வுக்கு உந்துசக்தியாக தொடர்கிறது என்று கூறியுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு